வடகயி லாயத் தெல்லை வயங்கிய பிரம தீர்த்தங்
கடன்முறை மூன்று பக்கங் காதலி னாடி யுள்ளும்
படர்தரப் பருகி னோர்க்குப் பகர்ந்தநான் மலடுநீங்கும்
அடர்தரு பூத மண்ணை யாதியி னலைப்புந் தீரும்
வடகயிலாயத்தின் எல்லையிலே விளங்கும் பிரமதீர்த்தத்திலே விதிப்படி மூன்றுபக்கம் ( ஒரு மண்டலம் ) விருப்பத்துடன் முழுகி,அந்த நீரைப் பருகினோர்க்கு நான்வகை மலடுகள் ( பிள்ளை பெறாமை,கருவினுள் அழிதல்,சாப்பிள்ளை பெறுதல்,ஒருமகப் பெறுதல் ) நீங்கும்.வருத்துகின்ற பூதம்,பேய் முதலியவற்றினால் நேரும் துன்பங்கள் தீரும்.
Tuesday, December 16, 2008
Sunday, December 14, 2008
தல புராணம் 1
தடவிய வங்கைக் குண்டிகை யாங்குத் தரையுள்ளே
இடவிய தீர்த்த மாக விருத்தி யிமையாரும்
வடகயி லாய மென்று துதிப்ப வளரங்கி
அடவியி னாடு மண்ணலை நூலா னமர்வித்தான்
கமண்டலத்தைத் தீர்த்தமாகப் பூமியில் புதைத்து,தேவர்களும் வடகயிலாயம் எனப்போற்ற தீவளரும் காடாகிய இடுகாட்டில் ஆடும்பெருமானை ஆகம விதிப்படிப் பிரதிட்டைப் பண்ணிணான்.
தல புராணம்
ஒரு முறை பிரம்மா நித்திரை நீங்கி,நித்திய கர்மங்களை நிறைவேற்றி,உலகத்தைப் படைக்கத் தொடங்கிய அளவில்,வேதங்களின் முறையை மறந்தமையால் அத்தொழில் கைகூடப் பெற்றிலர்.எனவே பிரம்மா வருந்தி மத்தியகயிலையைச் சார்ந்து தேவதேவரை வணங்கி விண்ணப்பஞ் செய்ய அதற்கு மகாதேவர் '' தட்சிண கயிலாயமாகிய பேருரில் நமது தாண்டவத்தை வேண்டி விஷ்ணு கோமுனிவனாகிக் காலவமுனிவனோடு கலந்து தவம் செய்கிறார்.காமதேனு வழிபட்டமையால் நமக்குப்பட்டிநாதர் எனப்பெயரும் உண்டு.எனவே நீ பட்டிமுனிவனாகி அத்தலம் சென்று நமது நடனத்தைக் கண்டு எண்ணிய வரம் பெறலாம்'' என்றார்.
ஆலவ னத்திற் கொற்றவை கோட்ட மதன்கீழ்சார்
காலவன் பூசை கண்டரு ளீசர் நகர்மேல்பாற்
கோலம றாத காஞ்சியின் றென்பாற் குளிர்பன்னீர்
மூலலிங் கத்தி னுத்தர திக்கின் முன்னுற்றான்.
ஆலங்காட்டுக் காளி கோயிலுக்குக் கிழக்கிலும்,காலவன் பூசித்த இறைவன் கோயிலுக்கு மேற்கிலும், காஞ்சியாற்றிற்க்கு தெற்க்கிலும்,பன்னீர் மரத்தடியிலுள்ள சிவலிங்கப் பெருமானுக்கு ( பேரூர் )வடக்கிலும் அமைந்த இடத்தை அடைந்தார்.
Sunday, December 7, 2008
பிரம்மதீர்த்தம்
பேரூர் கோவிலில் செயல்அலுவலரைப் போய்பார்த்தேன்.ஒரு கடிதம் கொடுத்துவிட்டு நீங்கள் கிணற்றை சுத்தம் செய்யலாம் என்றனர்.ஆட்கள் சிலரை சேர்த்துக்கொண்டு அந்த கிணற்றை சுத்தம்செய்தோம்.ஒரே துர்நாற்றமாக இருந்தது.
எனக்கு வெளிநாட்டினர் நினைவு வந்தது.100 வருடங்களான கட்டிடங்களையே அவர்கள் புராதனச்சின்னங்கள் எனப்பாதுகாத்து வருகின்றனர்.ஆனால் நாமோ அவற்றை அலட்சியம் செய்வதுடன் அழிக்கவும் முற்படுகிறோம்.
குப்பைகளை வெளியே எடுத்தவுடன் சில நாட்களில் நீர் மேலேவரத்தொடங்கியது.தேங்கிய நீரை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே புதுநீர் ஊறத்தொடங்கும் என்பதால் போர்மோட்டாரைக்கொண்டுவந்து அதையும் செய்தோம்.
இப்போது நீர் நன்றாக மேலேவரத்தொடங்கியது.மனதுக்கு திருப்தியாக இருந்தது.ஒரு எண்ணம் தோன்றியது,இக்கோவிலுக்கு என ஒரு தலபுராணம் இருக்கவேண்டுமே என.உடனே பட்டீஸ்வரர் கோவிலுக்கு விரைந்தேன்.கோவிலில் புத்தகம் இல்லை எனப்பதில் வந்தது.சுற்றியுள்ள கடைகளில் இருந்த புத்தகங்கள் சொல்லும் செய்திகள் எந்தளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை எனப்புரியவில்லை.சற்றும் மனம்தளராமல் அருகிலுள்ள சாந்தலிங்கர் மடத்திற்குச் சென்றேன்.இந்த மடம் திருவாவடுதுறை,திருப்பனந்தாள்,தருமபுரம் மடங்களுக்கு இணையான பழமைவாய்ந்தது.தமிழ்ப்பணி,கல்விப்பணி மற்றும் தமிழ்முறையில் திருமணம், கோவில் குடமுழுக்கு என மக்களோடு இரண்டறக்கலந்தவர்கள்.நான் போனபோது பெரியஆதீனம் ஓய்வில் இருந்தார்.வணக்கம் சொன்னவுடன் விபூதி கொடுத்தார்.
Saturday, December 6, 2008
பேரூர்- மேலைச்சிதம்பரம்
சமீபத்தில் பேரூர் சென்றிருந்தேன்.கோவையிலிருந்து 10 கி.மி.தொலைவில் உள்ளது.கோவிலின் உள்ளே ஒரு அறிவிப்பு இருந்தது.பேருரின் சிறப்பு இறவாப்பனை மற்றும் பிறவாப்புளி என்பதுதான் அது.எனவே அந்த இறவாப்பனை இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு அங்கே சென்றேன்.
அந்த மரத்தைப் பார்த்துவிட்டு அதன்அருகிலுள்ள பூட்டியிருந்த கோவிலைப் பற்றி விசாரித்தேன்.அக்கோவிலின் பெயர் '' வட கயிலாயம் '' எனவும் பிரம்மா வழிபட்ட தலம் எனவும் கூறினர்.
ஆனால் கோவில் எப்போதும் பூட்டியே கிடந்தது.சிறிது முயற்சிக்குப் பின் கோவில் அர்ச்சகர் கிடைத்தார்.
கோவிலின் உள்ளே சிறிய கிணறு ஒன்று இருந்தது.கேட்டபோது அது '' பிரம்ம தீர்த்தம் '' எனவும் மனநோய் தீர்க்கக்கூடியது என்றும் கூறினார்.உள்ளே எட்டிப்பார்த்தால் குப்பைமேடாக இருந்தது.''என்னங்க இப்படி இருக்குது'' என அருகில் இருந்தவர்களை கேட்டபோது பேரூர் கோவில் கும்பாபிஷேகத்தில் உபயோகித்த மாலைகளை கொண்டுவந்து இந்த கிணற்றில் 10 வருடங்களுக்கு முன் போட்டுவிட்டனர்.அதன்பின் இந்த கிணறு பயன்படுத்த முடியாமல் போய்விட்டது என்றனர்.
Monday, April 14, 2008
ஸ்ரீ ராமநவமி
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் இன்றித் தீருமே
சென்மமும் மரணமும் இன்றித்தீருமே
இம்மையே இராமாஎன் றிரண்டெ ழுத்தினால்
Sunday, March 23, 2008
ஒன்பது வகை பக்தி
1. ஸ்ரவணம் -இறைவனின் புகழை பிறர் கூறக்கேட்பது ( பரீட்சித்து மன்னன்)
2. கீர்த்தனம்-இறைவனின் புகழை பாடிக்கொண்டே இருத்தல் (நாரதர்)
3. விஷ்ணுஸ்மரணம்-இறைவன் நாமத்தை எப்போதும் ஜபித்துக் கொண்டே
இருத்தல் ( பிரகலாதன் )
4. பாதஸேவனம்-இறைவனது பாதங்களை சரணடைந்து அவருக்கு ஸேவை
செய்தல்( லட்சுமி )
5. அர்ச்சனம்-இறைவனை வழிபட்டு ஆராதித்தல்
6. வந்தனம்-வணங்கிக் கொண்டே இருத்தல் ( அக்ரூரர்)
7. தாஸ்யம்-இறைவனுக்கு சேவை செய்தல் ( அனுமார்)
8. சக்யம் -இறைவனை நண்பனாக பாவித்தல் ( அர்சுனன் )
9. ஆத்மநிவேதனம்-இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தல்(ராதா)
குரு
நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே
கலைமகள் துதி
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்அம்மை- தூய
உருப்பளிங்கு போல்வாள் என்உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்
மகாகவி கம்பர்
முதல்வணக்கம்
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும்உன்
திருஅ டிப்புகழ்பாடுப் திறமும்நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா
உணர்வும் தந்துஎனது உள்ளத்து அமர்ந்தவா
குருவும் தெய்வமும் ஆகிஅன் பாளர்தம்
குறைத விர்க்கும் குணப்பெருங் குன்றமே
வெருவும் சிந்தை விலகக் கஜானனம்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
ஸ்ரீ இராமலிங்க அடிகளார்
Subscribe to:
Posts (Atom)